உறுப்பினர்கள்

யார் இஸ்லாமியன் ?

உங்களுக்கு இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக ! இன்று இஸ்லாமிய சமுதாய மக்களுக்கிடையில் கருத்து வேறுபாடு பல்வேறு உண்டாகி, அதனால் பல்வேறு கூட்டங்கள் உருவாகி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளை எடுத்துக் கொண்டு, தான் கொண்ட கொள்கையே சரி என்று விவாதித்துக் கொண்டு அதற்காக ஆளுக்கொரு புத்தகத்தை எழுதிக்கொண்டு இஸ்லாத்தை தூய வடிவில் அறிய என்றும், நபி வழியில் இஸ்லாம் என்றும், குர்ஆன் ஹதீஸ் என்றும் சொல்லி ஒவ்வொருவரும் தன் கொள்கையின்பால் ஒவ்வொருவரையும் ஈர்க்க (வரவழைக்க) பெரும் பாடு படுகிறார்கள்.
சரி, அப்படி பாடுபட்டு, தான் கொண்ட கொள்கையை பற்றிப் பிடித்துக் கொண்டு இஸ்லாமிய மக்களை அழைக்கக் காரணம் ?  தான் நேரான பாதையில் இருக்கிறோம் என்ற அசாத்திய தைரியம், மேலும் நம்பிக்கை..
அதனால் தன்னுடன் எல்லோரும் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆசை ! சரி அந்த ஆசையும் கூட எல்லாக் கூட்டத்தார்களுக்கும் இருந்தால் ?  இருந்தால் என்ன இருக்கத்தானே செய்கிறது , அப்போது  நாம் எந்த கூட்டாத்தாரை நம்புவது  அல்லது எந்தக் கூட்டத்தாரை பின்பற்றுவது ?  என்ற கேள்வி என்னைப் போன்ற எல்லாப் பாமர இஸ்லாமியனுக்கும் எழும் என்றால் அதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை,
மேலும் ரஸூல் (ஸல்)அவர்கள் சொன்னது போல இஸ்லாத்திற்குள் 73 கூட்டங்கள் பிரியும் அதில் ஒரு கூட்டம் மற்றும் வெற்றி பெரும் என்று சொன்ன அந்த இறுதி காலம் இதுவாக இருக்குமோ என்று சொல்லும் அளவுக்கு இன்று இஸ்லாத்திற்குள் ஏகப்பட்ட பிரிவுகள்..
வெற்றி பெரும் அந்த ஒரு கூட்டத்தை நாம் எப்படி தேர்ந்தெடுப்பது இது கண்டிப்பாக முடியாத காரியம், ஏனென்றால் அத்தனைப் பேருமே  குர் ஆனையும் ஹதீஸையுமே ஆதாரமாகக் காட்டுகிறார்கள், வேறு எப்படி அறிவது ? யாரைப் பின் பற்றுவது ? நாம்  யாரையும் அறிய முடியாது தான் , ஆனால் ஒரு கூட்டத்தாரை நாம் கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டுமே , அந்த கூட்டத்தாரை வல்ல நாயனான அல்லாஹ்வைத் தவிர நமக்கு வேறு யாரால் காட்டித் தர இயலும் ?

அல்லாஹ் தான் நாடியவர்களை நேர் வழியில் செலுத்துகிறான் தான் நாடியவர்களை வழிகேட்டில் விட்டு விடுகிறான்
அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்துகின்றானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள், எவர்களை தவறான வழியில் விட்டு விட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே ! - குர்ஆன் (7:178)
"லா ஹவ்ல வலா கூவ்வத்த இல்லா பில்லாஹில் அலியுல் அலீம்" நன்மையை செய்வதாயினும் தீமையை விட்டு விலகுவதாயினும் நாம் சக்தியற்றவனாக இருக்கிறோம்,
இன்னும் ஒரு இலை உதிர்வதானாலும் அது இறைவனின் நாட்டமின்றி உதிராது, இது போன்ற குறிப்புகள் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல இடங்களில் காணக்கிடைக்கிறது,
இதில் நமக்கு என்ன தெரிகிறது என்று சொன்னால் நாம் எதையுமே நம்மால் சுயமாக செய்ய முடியாது அல்லாஹ் நாடினாலன்றி என்பதே தெளிவாகிறது, இது எல்லா முஸ்லீம்களும் ஏற்றுக்கொண்ட உண்மையும் அதுதான் ,
அப்படியிருக்க ஒருவன் நேர்வழியில் செல்வதென்பதும் வழி தவறிய  வழியில் செல்வதென்பதும் இறைவனின் நாட்டத்தைப் பொருத்துத்தான் என்றால் நாம் எதற்கும் பிரயாசைப் படத்தேவை இல்லையே ! எதை செய்து என்னப் பயன் கிடைக்கப் போகிறது ?  நாம் நேரான வழியில் இருப்பதாக எண்ணிக்கொண்டு ஒரு தவறான பாதையில் இருப்போ மானால் அதுவும் இறைவனின் நாட்டம்தான் என்று இருந்து விடுவதா ?
அப்படியென்றால் நாம் ஒரு ஹராமான காரியத்தை செய்து கொண்டோ அல்லது ஃபர்லான காரியங்களை செய்வதில் அலட்ச்சியம் செய்து கொண்டோ இருந்து கொண்டு இதுவும் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடக்கிறது என்று சொல்வதா ? என்றால் நிச்சயமாக இல்லை.
உங்களுக்கு ஒரு நல்லது நடக்குமாயின் அது என் புறத்திலிருந்து வருகிறது அதுவே உங்களுக்கு ஒரு கெட்டது நடக்குமாயின் அதை நீங்களே தேடிக்கொண்டது (ஹதீஸ்) என்று அல்லாஹ் கூறுகிறான் .
காரணம் நாம் ஒரு ஹராமான காரியத்தை அல்லது ஒரு பாவமான காரியத்தை செய்ய முற்படுவோமாயின் அது ஷைத்தானின் தூண்டுதலின் காரணமாக நம் உள்ளம் அதை செய்ய நாடுகிறது என்று விளங்க வேண்டுமே ஒழிய அன்றி இவ்விஷயத்தில் இது அல்லாஹ்வின் நாட்டம் என்று நாம் விளங்கக் கூடாது.
மனித வாழ்க்கையில் வழி கெடுத்தே தீருவேன் என்று வரம் கேட்ட ஷைத்தானுக்கு அல்லாஹ் அனுமதி அளித்தான் சில நிபந்தனைகளோடு ! யார் என் பக்கம் திரும்பி விட்டார்களோ அவர்களை உன்னால் வழி கெடுக்கவும் முடியாது,  நான் அவர்களை வழி தவறவும் விடமாட்டேன் என்று !
அப்படியென்றால் முஸ்லீம்களாகிய நாம் அனைவரும் குஃப்ரியத்தை விட்டும் நீங்கியவர்களாக முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்றும், அவர்கள் காட்டித் தந்த அல்லாஹ்வையே இறைவனென்றும் ஏற்றுக் கொண்டு லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று நாவாலும் மனதாலும் மொழிந்து சாட்சி பகர்கிறோமே மேலும் வேதங்களையும், மலக்குமார்களையும், இன்னும் மரணத்திற்கு பின் எழுப்பப்படுவோம் என்பதையும் இன்னும் கப்ரில் கேள்வி கணக்கு கேட்கப்படும் என்பதையும்,சுவர்க்கம் நரகம், தீர்ப்பு நாள் இப்படி அத்தனையும் ஏற்றுக் கொண்டு இஸ்லாமியர்களாக இருக்கின்றோமே அப்படியென்றால் நாம் இறைவன் பக்கம் திரும்பி விட்டோம் என்றல்லவா அர்த்தம் ,
இறைவன் சொன்னது போல்யார் என் பக்கம் திரும்பி விட்டார்களோ அவர்களை உன்னால் வழி கெடுக்கவும் முடியாது, நான் அவர்களை வழி தவறவும் விடமாட்டேன்” 
என்று ஷைத்தானிடம் சொல்லியது போல், நம்மை நேர் வழியில் செலுத்தி விட்டானா அல்லது நாம்தான் அவன் பக்கம் திரும்பி விட்டோமா ?
அப்படியென்றால் இஸ்லாமியர்கள் அனைவரும் நேர்வழி அடைந்தவர்களா ? அப்படியென்றால் இஸ்லாமியர்களுக்குள் ஏன் இத்தனை கூட்டம் ? இதில் எந்த கூட்டம் நேரான வழியை பின்பற்றுகிறது என்று ஏன் இப்படி வீண் விவாதம் ? அதற்குத்தான் என்ன காரணம்… ?

 
மூஃமீன்களே ! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள் !!
 
நாம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பி விட்டோம் என்பது எவ்வளவு உண்மையாக இருந்தாலும் கூட நாம் அதே இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்து விட்டோமா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்றே நமக்கு தோன்றும், அதுவே இதற்கு காரணமாய் இருக்குமோ என்று நம்மையே நாம் கேட்டுக் கொண்டால் நமக்கே புலப்படும் நாம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பி விட்டோமே தவிற நிச்சயமாக நாம்  இஸ்லாத்தின் பக்கம் முழுமையாக நுழையவில்லை  இன்னும் இறைவன் பக்கம் முழுமையாக திரும்பவில்லை என்று..!!
யார் என் பக்கம் திரும்பி விட்டார்களோ அவர்களை உன்னால் வழி கெடுக்கவும் முடியாது, நான் அவர்களை வழி தவறவும் விடமாட்டேன்” 
என்று அல்லாஹ் ஷைத்தானிடம் சொல்லிய அந்த வார்த்தை முற்றிலும் சரியானதும் மேலும் உண்மையானதுவும் கூட... என்பதை உணர்வோம்.
அதற்காகத்தான் அல்லாஹ் தனது திருமறையிலேயே சொல்லி விடுகிறான் "மூமீன்களே நீங்கள் இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்துக் கொள்ளுங்கள்" - (குர்ஆன்-2:208) என்று !
அப்படியென்றால் நாம், கடமையான விஷயங்களில் அலட்சியம் செய்கிறோம் இன்னும் பாவமான பல காரியங்களை படைத்தவனின் படு பயங்கரமான தண்டனைகளை மறந்து பல நேரங்களில் பல பாவங்களை செய்கிறோம், அத்துடன் தொழுகிறோம், மார்க்கம் பேசுகிறோம் விவாதம் புரிகிறோம், உண்மையில் நாம் அல்லாஹுக்கு பயப்படுகிறவர்களாக மற்றவர்களுக்கு காட்டிக் கொள்கிறோமே தவிர உண்மையில் நாம் அல்லாஹுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படவில்லை என்பதே எதார்த்த உண்மை ! இதற்காகத்தான் அல்லாஹ் குர்ஆனிலேயே சொல்கிறான் "மூஃமீன்களே நீங்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படவேண்டும்" (குர் ஆன் - 3:102) என்று !
 ஷைத்தான் நம்மை இழுத்துச் சென்று நம்முடைய நஃப்ஸுக்கு நம்மை அடிமையாக்கி பாவங்களை செய்ய வைத்து கொண்டு இருக்கின்றான் இதை உணர்ந்து, தான் செய்த தவற்றையெல்லாம் எண்ணி மனம் வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவதனால் பாவமும் மன்னிக்கப்படும், அல்லாஹ்வின் அன்பும் கிடைக்கப்பெறும்,  அத்துடன் மீண்டும் எந்த பாவமான காரியங்களை செய்வதைவிட்டும் இன்னும் அனைத்து ஹராமான விஷயங்களை விட்டும் நாம் பேணிக்கொள்வதோடு அவனது கட்டளைகளையும் கடமைகளையும் சரியாக எடுத்து நடந்து வருவோமேயானால் அல்லாஹ்வின் அருளும் கிடைக்கப் பெறுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, அல்லாஹ்வின் அன்பும் அருளும் கிடைக்கப் பெறுவோரை அல்லாஹ் கை விட்டு விடுவானா கைவிட மாட்டான் ! நிச்சயமாக நேரான வழியை அவனே காட்டித் தருவான் என்பதே ஈமான்,
மேலும் அவனது அன்பையும் அருளையும் நாம் பெற்றாலும் கூட அவன் நமக்கு நேரான வழியை காட்டித் தருவான் என்று இருந்தாலும் கூட நாம் தனக்கு நேரான வழியை காட்டித் தர வல்ல நாயனான அல்லாஹ்விடமே இறைஞ்சவும் வேண்டும், ஏனெனில்
   
நாம் நேர் வழியில் செல்ல அவனிடம்  இறைஞ்ச வேண்டும் என்று அவனே குர்ஆனில் சொல்லித் தருகிறான்.
"
இஹ்தினஸ்சிராத்தல் முஸ்தகீம்" (யா அல்லாஹ் எங்களை நீ நேரான வழியில் செலுத்துவாயாக),
"
சிராத்தல்லதீன அன் அம்த்த அலைஹிம்" (அவ்வழி எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவ்வழி)
"கைரில் மஃக்லூபி அலைஹிம் வலல்ழாலீன்" (அவ்வழி உன் கோபத்திற்குள்ளானவர்களோ அல்லது வழி தவறியவர்களோ சென்ற வழியும் அல்ல)
அவன் நமக்கு நேரான வழியை காட்டிதர அவனது அன்பை பெற இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நீங்கள் இஸ்லாத்தில் இருக்கிறீர்களே தவிர இஸ்லாத்திற்க்குள் முழுமையாக இருக்கிறீர்களா என்று நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள், இல்லையேல் இனியாவது இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்துக் கொள்ளுங்கள் "மூமீன்களே நீங்கள் இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்துக் கொள்ளுங்கள்" - (குர்ஆன்-2:208)
அடுத்தவர்கள் பார்ப்பதற்காக தொழவும், அறிஞர்கள் என்று தன்னைப் போற்றுவதற்காக வாதம் செய்து வெற்றி பெற நினைப்பதுவுமே வாழ்க்கையாக்கிக் கொண்டு வாழ்நாளை பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர், அவர்கள் தொழுதபோதிலும் மக்களுக்கு காண்பிப்பதற்காகவே தொழுகிறார்கள் (07:06 - குர் ஆன்) 
இந்நிலையிலிருந்து நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் "மூஃமீன்களே நீங்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படவேண்டும்" (குர் ஆன் - 3:102)
எப்படி ?  தொழுகை நோன்பு ஜக்காத்து மற்றும் அனைத்து இஸ்லாமிய கடமைகளையும் கடமைக்காக செய்து வருவதால் நீங்கள் இஸ்லாத்தில் இருக்கலாமே ஒழிய இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்துவிட்டதாக முடியாது, காரணம் கடமைக்காக மற்றும் பெருமைக்காக செய்யும் எந்த அமல்களினாலும் அல்லாஹுக்கு எந்த தேவையும் கிடையாது, நாம்தான் நமக்கு அல்லாஹ்வின்பால் தேவையுடையவர்களாக இருப்பதனால் அவனது கடமைகளை நிறைவேற்றக்கூடிய கட்டாயத்தில் இருக்கிறோம், அந்தக் கடமைகளையும் கடமைக்காக எந்தவித ஈடுபாடும் இல்லாமல் செய்கிறோம், கருணையுள்ள ரஹ்மானின் கடைகண்ணாவது நம் மீது பட வேண்டுமானால் தொழுகை மற்றும் அனைத்து அமல்களையும் அவனின் அன்பை நாடி அவனது திருப் பொருத்தத்தை நாடி அவனுக்காக நம்மை அர்ப்பணித்து செய்ய வேண்டும், அப்படி நம்மை அர்ப்பணித்து ஒவ்வொரு காரியங்களையும் செய்யும்போது அவன் மீது அன்பும் அவன் மீது அச்சமும் உண்டாகும், அதனால் நாம் வெளிப்படையில் மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்றும் தனிமையிலும் கூட அல்லாஹுக்கு பயந்து எந்த ஒரு பாவச் செயலையும் செய்ய மாட்டோம், நாம் பாவங்களை செய்ய பயப்படுவதன் மூலமும், அத்துடன் எல்லோரிடத்திலும்  அன்பு செலுத்தி வருவதன் மூலமும் இன்னும்   நம்முடைய ஈமானை வலுப்படுத்திக் கொள்ள பொய் பேசாமலும், புறம் பேசாமலும், யாரையும் நினைப்பில் கூட ஏமாற்றாமலும், அப்படி நம் நடத்தையிலும், பார்வையிலும், சொல்லிலும்,செயலிலும் அகத்தாலும் புறத்தாலும் அல்லாஹுக்கு பயப்படுவோமேயானால்  அல்லாஹ்வின் பார்வையும் அன்பும் நம்மீது பட்டு அல்லாஹ்வின் அருளால் நமக்கு அவன் நேரான வழியையும் நிச்சயம் காட்டித் தருவான் என்பதே உண்மையிலும் உண்மை !
இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியனாக வாழ்வதென்பதும் இஸ்லாமியர்கள் மிகைத்திருக்கும் ஊரில் இஸ்லாமியக் கலாச்சாரங்களை ஏற்று நடப்பதென்பதும் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியனாக வாழ்வதென்பதும் ஒரு பெரிய விஷயம் அல்ல காரணம் இப்படிப்பட்ட சுற்றுச் சூழலினால் இஸ்லாமியர் அல்லாத மனிதர் கூட இஸ்லாமியர்கள் போன்று நடந்துக் கொள்கிறார்கள் என்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம்
அதனால் அவர்கள் இஸ்லாமியர்களாக ஆகி விட முடியாது அதுபோல் இஸ்லாமியர்களை பொருத்தவரை நாவால் கலிமாவை சொல்லி மனதால் அல்லாஹ்வையும் ரஸூலையும் இம்மையும் மறுமையும் ஏற்றுக் கொண்டதனால் மட்டும் முழு இஸ்லாமியனாக ஆகி விட முடியாது இந்த இஸ்லாமியன் தொழுகை நோன்பு ஜக்காத் போன்ற அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் மூஃமீன்களாக வாழ வேண்டும் இப்படி  அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் மூஃமீன்களைப் பார்த்துத்தான் அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்  "மூஃமீன்களே நீங்கள் இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்துக் கொள்ளுங்கள்" - (குர்ஆன்-2:208)
இப்போது மூஃமீன்களாகிய  நாம் எந்த அளவுக்கு இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்திருக்கிறோம் என்பதை நாமே நமக்குள் கேட்டுக் கொண்டு முழு இஸ்லாமியனாக வாழ இறைவன் சொன்னது போல் இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைய நாம் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். வீணான தர்க்கம் வீணான விவாதம் போன்ற செயல்களில் ஈடுபடாமல், வாழும் இந்த அற்ப்பமான காலத்தில் சொற்பமாக கிடைக்கும் நேரத்தை இறைவனுக்கு அற்பணித்து அல்லாஹ் சொல்லியபடி இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்தவர்களாக வாழ எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ! ஆமீன் !!

1 comment:

  1. insha allah. Revealing Heaven of Quran. https://www.youtube.com/watch?v=qYWGW0oXakI&index=19&list=PLw_oR2PvIg_JtLaOMn4mUK5HuPF2ja6jY

    ReplyDelete